திருவள்ளூர்

மருத்துவமனை உரிமையாளர் கடத்தல்: 4 பேர் கைது

30th Nov 2022 03:23 AM

ADVERTISEMENT

ஆவடி அருகே மருத்துவமனை உரிமையாளரை தாக்கி காரில் கடத்திய பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 அம்பத்தூர், லெனின் நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (54). திருமுல்லைவாயல், குளக்கரை சாலையில், மருத்துவமனை, மருந்தகம் நடத்தி வருகிறார். சுந்தரமூர்த்தி மருத்துவமனையை விரிவுபடுத்த முதலீட்டாளர்களை வரவேற்று விளம்பரம் செய்துள்ளார்.
 இதையடுத்து, சேலத்தில் வசிக்கும் நீலமேகம் மூலமாக சென்னை, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த வைஷாலி (28) சுந்தரமூர்த்தியிடம் அறிமுகமானார். அவர் ரூ. 7 லட்சம் வரை முதலீடு செய்தாராம். ஆனால் மருத்துவமனையில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாததால், சுந்தரமூர்த்தியால் வைஷாலிக்கு முதலிட்டுக்கான லாபத்தை கொடுக்க முடியவில்லையாம். வைஷாலி பலமுறை பணத்தை கேட்டும் சுந்தரமூர்த்தி தரவில்லையாம்.
 இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வைஷாலி, தன்னுடன் பணிபுரியும் ஊழியர் பாரதிதாசன் (39), தனது அக்கா கணவர் சிவா (30), பல்லாவரத்தைச் சேர்ந்த தேவகுமார் (27) ஆகியோருடன் காரில் திருமுல்லைவாயல் வந்தார். பின்னர், அங்குள்ள தேனீர் கடைக்கு சுந்தரமூர்த்தியை வரவழைத்து, அவரை தாக்கி காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுந்தரமூர்த்தியின் மகள் விஷ்ணுபிரியா (29) திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த வைஷாலி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, சுந்தரமூர்த்தியை மீட்டனர்.
 பின்னர், கைது செய்யப்பட்ட 4 பேரையும் செவ்வாய்க்கிழமை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT