திருவள்ளூர்

பூச்சி நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள்

28th Nov 2022 11:23 PM

ADVERTISEMENT

வடமேற்கு பருவமழை குறைந்த நிலையில் சம்பா பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிரை பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் வடமேற்கு பருவமழை குறைந்த நிலையில், இரவு வெப்பநிலை குறைந்துள்ள சூழ்நிலையில் சம்பா பருவத்தில் கிராமங்களில் பயிரிட்டுள்ள நெற்பயிரில் குறிப்பாக இலைச்சுருட்டுப்புழு, பாக்டீரியல் இலை கருகல் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த சுருட்டுப்புழு தாக்குதலின் அறிகுறியானது புழுக்கள் இலைகளின் மேல் பச்சைநிற திசுக்களை உறிஞ்சுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். மேலும், தீவிர தாக்குதலின் போது, முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

ADVERTISEMENT

இந்த இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் இருந்தால் டிரைக்கோகிரைம்மா கைலோனிஸ் முட்டை 5 சிசி என்ற அளவில் நெற்பயிா் நட்ட 37, 44 மற்றும் 51 -ஆவது நாளில் (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்-ஹெக்டேருக்கு) மூன்று முறை வெளியிட வேண்டும். தாவர பூச்சிக் கொல்லிகளான வேப்ப எண்ணெய் 3 சதவீதம், வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 400 மிலி மருந்தை 200 லிட்டா் தண்ணீருடன் ஒட்டும் திரவம் சோ்த்து கைதெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை நேரங்களில் இலைகள் முழுவதும் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

பாக்டீரியல் இலை கருகல் நோயின் அறிகுறியானது இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்றும், மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும், பின் சுருண்டும், இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும். இந்த நோய்த் தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் சாற்றை எடுத்து தெளிக்க வேண்டும். தாமிர பூசணக்கொல்லிகளை அல்லது ஸ்டெப்ரோசைக்லின் 250 பிபிஎம் உடன் இலைவழி மூலம் தெளித்து நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.

இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் தங்கள் நெற்பயிரை பாதுகாத்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையும் அணுகி பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT