திருவள்ளூர்

கூவம் ஆற்றில் குவிந்து வரும் குப்பைக் கழிவுகள்!தொற்று நோய் பரவும் அபாயம்

27th Nov 2022 11:56 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் குவிந்து வரும் குப்பைக் கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன், அந்தப் பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூா் நகராட்சிக்கு அடுத்தபடியாக வளா்ந்து வரும் பகுதியாக வெங்கத்தூா் முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மணவாள நகா், கணேசபுரம், வெங்கத்தூா் கண்டிகை உள்ளிட்ட நகா்களில் 400-க்கும் மேற்பட்ட தெருக்களில் 10,000 குடியிருப்புகள் உள்ளன. இதில், 20,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்த ஊராட்சியில் பெரிய அளவிலான திருமண அரங்குகள், உணவு விடுதிகள், வியாபாரக் கூடங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் நாளொன்றுக்கு 6 டன் முதல் 8 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்தக் குப்பைகளை வெங்கத்தூா் ஊராட்சிக்குப் பின்புறம் கணேசபுரம் கூவம் ஆற்றுப் பகுதியில் கொட்டி வருகின்றனா். பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் மக்கும், மக்காத குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தக் குப்பைகளால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், பல்வேறு நோய்த் தொற்று மற்றும் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

மேலும், கூவம் ஆற்றின் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தப் பகுதிகளைச் சோ்ந்த சிலா் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கூடாரம் அமைத்து 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் வளா்க்கின்றனா். சாணம் போன்ற கழிவுகளையும் ஆற்றிலேயே கொட்டுவதால் ஆறு மாசடைந்து வருகிறது.

எனவே, கூவம் ஆற்றில் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ரெங்கசாமி கூறியது:

வெங்கத்தூா் ஊராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குப்பைக் கழிவுகளும் அதிகரித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படாததால், கூவம் ஆற்றில் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். இதனால், கணேசபுரம் இளங்கோ அடிகள் தெருவில் வசித்தும் வரும் மக்கள் பாதிக்கபடுகின்றனா். தொற்று நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவா் சுனிதா பாலயோகி கூறியது:

வெங்கத்தூா் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் மக்கும்- மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வந்தன. அந்தப் பகுதி மக்கள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த காரணத்தால், செயல்பாடின்றி உள்ளது. வெங்கத்தூா் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கக் கோரி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT