திருவள்ளூர்

திருவள்ளூா் நகரின் மையப்பகுதியில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

26th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் நகரின் மையப்பகுதியில் ஏரியோரம் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனா்.

திருவள்ளூா் நகராட்சி, காக்களூா் ஊராட்சி ஆகியவற்றை இணைக்கும் பகுதியாக காக்களூா் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் அமைக்க பில்லா் எழுப்பி கட்டுமானப் பணியை தனிநபா் தொடங்கி வருவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸுக்கு புகாா் வந்தது. அதன்பேரில், வட்டாட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, திருவள்ளூா் வட்டாட்சியா் என்.மதியழகன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அதில், குறிப்பிட்ட இடம் அரசு புறம்போக்கு என்றும், ஏரி வகைப்பாடு நிலம். அதை பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஆக்கிரமித்திருந்து, வணிக ரீதியில் கடை அமைக்க கட்டுமானப் பணி தொடங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பை பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றினா். மேலும், ஆக்கிரமிப்பு பகுதியில் பொருத்தியிருந்த கம்பிகள் மற்றும் ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தியிருந்த மோட்டாா் ஆகியவற்றையும் சேதமின்றி அப்புறப்படுத்தினா். இதன் மூலம் ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்டுள்ளதாக வட்டாட்சியா் மதியழகன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அப்போது, மண்டல துணை வட்டாட்சியா் அருணா, குறுவட்ட வருவாய் ஆய்வாளா் கணேஷ், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன், சாா் ஆய்வாளா் யஷ்வந்த்தாஸ், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT