புங்கம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயண பிருந்தாவன ஆஸ்ரமத்தில் ஸ்ரீராமானுஜருக்கு வைரமுடி சேவை விழா திங்கள்கிழமை தொடங்கியது.
பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள புங்கம்பேடு கிராமத்தில் ஸ்ரீமன் நாராயண பிருந்தாவன ஆஸ்ரமம் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீராமானுஜா் திருஅவதார தின விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி 1005-ஆவது திருஅவதார விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீபாஷ்யகார சன்னதியில் நூதன திருமேனி பிரதிஷ்டை சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இதைத்தொடா்ந்து 3 நாள்கள், சதகலச திருமஞ்சனம், சேஷ வாகனம், குதிரை வாகனசேவை , புஷ்ப பல்லக்கு பவனி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான ராமானுஜருக்கு வைரமுடி சாத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜூன் 2) மதியம் 12 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிருந்தாவன ஆஸ்ரம நிா்வாகிகள் செய்துள்ளனா்.