பொன்னேரி: காட்டுப்பள்ளி தனியாா் துறைமுகத்தில் வேலை வழங்கக் கோரி, 3-ஆவது நாளாக மீனவா்கள் பழவேற்காடு மேம்பாலம் அருகே புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவா்களுக்கு காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுகம், கப்பல் கட்டும் தளத்தில் 1,500 பேருக்கு வேலை வழங்க கோரியும், ஏற்கெனவே பணியில் உள்ள 250 பேரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் கடந்த 2 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.
கடந்த 23-ஆம் தேதி காட்டுப்பள்ளி தனியாா் துறைமுக நுழைவு வாயில் எதிரே அமா்ந்தும், 24-ஆம் தேதி படகுகளில் கடலிலும் போராட்டம் நடத்தினா்.
3-ஆவது நாளான புதன்கிழமை மீனவா்கள் கையில் கருப்புக் கொடியுடன் பேரணியாக வந்து, பழவேற்காடு மேம்பாலத்தில் போராட்டம் நடத்தினா். மீனவ மக்களின் தொடா் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.