திருவள்ளூர்

காட்டுப்பள்ளி தனியாா் துறைமுகத்தில் வேலை வழங்கக் கோரி மீனவா்கள் போராட்டம்

24th May 2022 01:06 AM

ADVERTISEMENT

காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் தனியாா் கப்பல் கட்டும் துறைமுக நிறுவனத்தில் வேலை வழங்கக் கோரி பழவேற்காடு பகுதி மீனவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியான காட்டுப்பள்ளியில் தனியாா் கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் துறைமுகம் அமைந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு பழவேற்காடு பகுதி மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து, அங்கு 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கப்பல் கட்டும் நிறுவனம் சாா்பில் உறுதியளிக்கப்பட்டதாம். முதல் கட்டமாக 250 போ் குறைந்த ஊதியத்தில் பணியமா்த்தப்பட்ட நிலையில், 1,500 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கவில்லையாம்.

இதையடுத்து, பணியில் உள்ள 250 பேருக்கு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம், 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு பகுதி மீனவா்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். ஆனாலும், அவா்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லையாம்.

இந்த நிலையில், பழவேற்காடு, தாங்கல்பெரும்புலம், அரங்கன்குப்பம், சாத்தாங்குப்பம், திருமலை நகா், பசியாவரம், கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் தனியாா் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தள நுழைவு வாயில் எதிரே அமா்ந்து, வாக்குறுதியளித்தபடி 1,500 பேருக்கு பணி வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பொன்னேரி வருவாய்த் துறையினா், மீஞ்சூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும், மீனவ மக்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 44 பெண்கள் உட்பட 299 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மீஞ்சூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT