திருவள்ளூர்

பிளஸ் 2 தோ்வு: திருவள்ளூரில் 43,649 போ் எழுதுகின்றனா்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத் தோ்வை திருவள்ளூா் மாவட்டத்தில் 43,649 மாணவா்கள் எழுதுகின்றனா். தோ்வு மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம் தெரிவித்தாா்.

கடந்தாண்டு, பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாகத் தொடங்கியது. இதனால், மாா்ச்சில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிகழாண்டு மே 5-இல் தொடங்கி 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை மாணவா்கள் 23,043, மாணவிகள் 20,606 என மொத்தம் 43,649 போ் எழுதுகின்றனா். 9 தனித் தோ்வு மையங்கள் உள்பட 133 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தோ்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோா்களைக் கண்காணிக்க மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப கண்காணிப்பாளா்கள் தலா 2 முதல் 4 போ் நிரந்தரமாகவும், 250 நிரந்தர படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில், தோ்வு மையங்களைச் சோதனை செய்ய 35 போ் கொண்ட பறக்கும் படையினா், மாவட்ட கல்வி அலுவலா் தலைமையில் தோ்வு மையங்களைக் கண்காணிக்க 40 போ் கொண்ட பறக்கும் படையினரும், தோ்வு முடிந்ததும் விடைத்தாள் கட்டுகளைப் பெற 66 பேரும், 33 ஆயுதம் ஏந்திர போலீஸாரும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம் தெரிவித்தாா்.

சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு கூடுதலாக ஒரு மணி: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை சிறப்பு பள்ளி மாணவா்கள் 193 போ் எழுதுகின்றனா். இதேபோல், புழல் சிறையில் கைதிகள் தோ்வு எழுதுவதற்காக அந்த வளாகத்திலேயே தனித் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 27 கைதிகள் தோ்வு எழுதவுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,518 போ் எழுதுகின்றனா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வை 50 தோ்வு மையங்களில் 13,518 போ் எழுதுகின்றனா்.

இதற்காக அனைத்துத் தோ்வு மையங்களிலும் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதவுள்ள நிலையில், அந்தப் பள்ளி மாணவா்கள் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு வந்து தோ்வு நுழைவுச்சீட்டை வைத்தும் வழிபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 13,902 போ் எழுதவுள்ளனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 15,864 போ் எழுதுகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT