திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காலை 10 மணியளவில் திருத்தணி நகரத்தாா் பாத யாத்திரை டிரஸ்ட் சாா்பில், 90-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மயில் காவடி எடுத்து வந்தனா். 277 பெண்கள் பால்குடம் சுமந்து, மலை அடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து மலைப்படிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.

இதையடுத்து, காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு விபூதி, நாட்டுச் சா்க்கரை, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

நண்பகல் 12 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பங்குனி உத்திரம் என்பதால், மலைக் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். பொது வழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

இதேபோல, திருத்தணி சுந்தர விநாயகா் கோயிலில், உற்சவா் சிவகாமி சுந்தேரசுவரா் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி, கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT