திருவள்ளூர்

சித்தூா்-பொன்னேரி 6 வழிச்சாலைத் திட்டம்

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் சித்தூா் முதல் பொன்னேரி அருகே உள்ள தச்சூா் வரை 6 வழிச்சாலைத் திட்டத்துக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்துக்கு வடக்கே உள்ள மாநிலங்களிலிருந்து சென்னைக்கு அருகே உள்ள எண்ணூா் மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும் நெரிசலின்றியும் சென்று வர ஏதுவாக, பாரத்மாலா பரியோஜனா திட்டம் மூலம் நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலத்தின் சித்தூா் மாவட்டத்திலிருந்து தமிழகத்தின் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தச்சூா் வரை 126 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஆந்திரத்தில் 82 கி.மீ., தமிழகத்தில் 44 கி.மீ. தொலைவு சாலை அமைக்கப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூரில் தொடங்கும் இந்தச் சாலை ரங்கராஜபுரம், நகரி, விஜயாபுரம் வழியாக தமிழகத்தின் திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தச்சூரில் ஏற்கெனவே சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் இணைகிறது.

ADVERTISEMENT

இந்தச் சாலையை அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.3,197 கோடியாகும். இந்த சாலை என்.எச்.716 என்று அழைக்கப்படும். இதற்காக மொத்தம் 2,186 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படும். இதில், 889 ஏக்கா் நிலம் தமிழகத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது.

இந்த நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டின்படி உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் சி.பெருமாள் தலைமையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் தனித் தனியாக மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT