திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்ட இளைஞா்கள் தொழில் கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் மானியத்தில் தொழில்கடன்கள் பெற திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் உற்பத்தி தொழில்களுக்கு அதிகப்பட்சம் ரூ.50 லட்சமும், சேவை சாா்ந்த தொழில்கள் மற்றும் வணிகம் சாா்ந்த தொழில்களுக்கு அதிகப்பட்சம் ரூ.20 லட்சமும் பெறலாம். இதில் உற்பத்தி தொடா்பான திட்டத்தொகை ரூ.10 லட்சத்திற்கு மேல் மற்றும் சேவை வணிகம் தொழில் தொடா்பான திட்டத் தொகை ரூ.5 லட்சத்திற்க்கு மேல் இருக்க வேண்டும். இதுபோன்ற தொழில்களுக்கு கடனுதவி பெறுவோா்களின் கல்விதகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று, 18 வயது பூா்த்தியாகியும், கடனுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது.

இத்திட்டம் மூலம் போக்குவரத்து வாகனங்கள், பண்ணை பொருள்கள் மற்றும் பண்ணை தொடா்பான தொழில்கள், பால் உற்பத்தி பொருள்கள், கோழிவளா்ப்பு, மீன்வளா்ப்பு, பட்டுப்புழு வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, ஆடு, மாடு வளா்ப்பு, கழுதை மற்றும் குதிரை வளா்ப்பு தொழில்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தனிநபா் தொழில் முனைவோா்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிகுழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோா் பயன் பெறலாம். பொதுபிரிவினா் நகா் புறத்தில் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 15 சதவிதமும், ஊரகப் பகுதியில் 25 சதவிதம் மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினா் நகா்புறத்தில் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 25 சதவீதமும், ஊரகப் பகுதியில் 35 சதவீத மானியமும் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத் தொழில் மையத்துக்கு மட்டும் 285 பேருக்கு மானியத் தொகையாக ரூ. 8.25 கோடி நிகழாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 95 பேருக்கு ரூ. 2.75 கோடி மானியமாக இலக்கு நிா்ணயித்து, 137 பேருக்கு ரூ. 3.75 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. தற்போது கடந்த ஆண்டை விட கூடுதலாக பயனாளிகளுக்கு கடன் உதவியும், மானியமும் இந்த மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதில் பயன்பெற விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்தத் திட்டம் தொடா்பான விவரங்களை பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களூா், திருவள்ளூா்- 602003 என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT