திருவள்ளூர்

தண்டலத்தில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பாதிப்பு: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

24th Jun 2022 01:14 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி தண்டலம் கிராமத்தில் தொடர்ந்து உயர் மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் நாசமாவதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் எளாவூரில் உள்ள மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்குள்  வெள்ளிக்கிழமை நுழைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலக நிர்வாகத்தின் கவனக்குறைவின் காரணமாக அண்மையில் தண்டலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பலியானார்.

அவ்வாறே கடந்த 6 மாதத்திற்கு முன்பு தண்டலம் பகுதியில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளில் சுமார் ரூ.50 லட்சம் ரூபாய்  மதிப்பிலான குளிர்சாதன பெட்டி, ஏசி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள் நாசமானது.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த ஜுன்-15 அன்று மீண்டும் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக ரூ.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் மீண்டும் ஒரு முறை நாசமானது.

இப்படி தண்டலம் பகுதியில் தொடர்ச்சியாக மின்வாரியத்தின் அலட்சிய போக்கால் கால்நடைகள்,மனித உயிர் பலியாவது மட்டுமல்லாது, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் நாசமடைகிறது.

இந்த போக்கு தொடர்வதை கண்டித்தும், இதற்கு மின்வாரியம் முடிவு கட்ட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தண்டலம் பகுதி மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து ஊர்வலமாக சென்று எளாவூரில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் நுழைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதையும் படிக்க: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.1 கோடி நிதி அரசாணை வெளியீடு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கே.முருகன் தலைமை தாங்கினார். எஸ்.மணிகண்டன், இ.சங்கர், ஜி.டில்லி முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி,  மாநில துணை தலைவர் ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஜெ.அருள், மாவட்ட தலைவர் ஜீவா, ஒன்றிய செயலாளர என்.செங்கல்வராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் என்.ராஜேஷ் கண்டன உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முரளி சமாதானம் பேசி, தண்டலம் பகுதியில் புதிய மின்கம்பிகள் மாற்றி, மின்பாதையில் பிரேக்கர்கள் அமைப்பதாக கூறி, உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT