திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், ரூ. 46 லட்சத்தில் லேப்ராஸ்கோபி என்ற துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் இயந்திரம் உள்பட ரூ. 3 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி ஸ்ரீவத்சவ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பல்வேறு நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனைக்கான நவீன கட்டட வளாகம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ள நிலையில், நீண்ட நாள்களாக லேப்ராஸ் கோபி என்ற துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் இயந்திரம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், சன் அறக்கட்டளை மூலம் சேவ் த சில்ட்ரன் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கவும் முன்வந்தது.
அதன் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 46 லட்சம் மதிப்பிலான துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் நவீன லேப்ராஸ் கோபி என்ற கருவி மற்றும் ரத்தப் பரிசோதனை ஆய்வு கருவிகள் உள்பட ரூ. 3 கோடி மதிப்பிலான மருத்துவ அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கினா். இந்தக் கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்வதால் நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்கத் தேவையில்லை. குறைந்த நாள்களில் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் செல்ல முடியும்.
இதேபோல், திருத்தணி, பொன்னேரி, ஆவடி ஆகிய அரசு மருத்துவமனைக்கும் தலா ரூ. 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.