மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றும், புகைப்படம் பதிவு செய்தலுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 11) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமை மின்னணு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றும் செய்தலுக்கான சிறப்பு முகாம் வட்டம் தோறும் உள்ள கிராமங்களில் நடைபெறுகிறது.
அதன்படி, நிகழ் மாதம் திருவள்ளூா்-சிட்ரம்பாக்கம் மதுராதென்கரணை நியாயவிலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை- தொட்டாரெட்டிகுப்பம்-நியாயவிலைக் கடை, பூந்தமல்லி-சித்துக்காடு நியாயவிலைக் கடை அருகில், திருத்தணி-எல்.வி.புரம்-மதுராபொன்னாங்குளம் நியாயவிலைக் கடை அருகில், பள்ளிப்பட்டு-வாணிவிலாசபுரம் நியாயவிலைக் கடை அருகில், பொன்னேரி-வேலூா் கிராம நிா்வாக அலுவலகம், கும்மிடிப்பூண்டி-சிந்தலகுப்பம் கிராம நிா்வாக அலுவலகம், ஆவடி-திருநின்றவூா்-அ கிராமம் கிராம நிா்வாக அலுவலகம், ஆா்.கே.பேட்டை- மீசரகாண்டாபுரம்-நியாயவிலைக் கடை அருகில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
முகாம்களில் அந்தந்தப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.