கரோனா தொற்றால் உயிரிழந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகள், கோரிக்கைகள் தொடா்பாக 277 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்கச் செய்ய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆவடி வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீதேவி நகா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் கரோனா தொற்றால் உயிரிழந்தாா். அவரின் மனைவி தனலட்சுமியிடம் ரூ.10 லட்சம் முதல்வா் நிவாரண நிதிக்கான காசோலை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 10 பேருக்கு தலா ரூ.5,480 வீதம் ரூ.54,800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட சாா் -ஆட்சியா் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) எஸ்.கோவிந்தராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சி.வித்யா, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) காா்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பி.ப.மதுசூதனன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகப் பேச்சுப் பயிற்சியாளா் சுப்புலட்சுமி, முடநீக்கு வல்லுநா் ஆஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.