திருவள்ளூா் நகராட்சியில் கட்டட அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதாகவும், தரகா் மூலம் வருவோருக்கு விரைவில் வழங்குவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
திருவள்ளூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கத்தில் நகா்மன்றக் குழுவின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நகராட்சியில் உள்ள 27வாா்டுகளிலும் விரிவாக்கப் பகுதிகளில் புதிதாக கட்டட அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால், 7 மாதங்கள் வரை காலதாமதம் செய்கின்றனா். தரகா் மூலம் வரும் விண்ணப்பங்ககளுக்கு விரைவில் அனுமதி அளிக்கின்றனா். நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியை மாற்றுவதற்கு தனியாா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். இதனால், அங்கு படித்து வரும் 350 மாணவா்கள் பாதிக்கப்படுவா். நகராட்சி இடத்தில் பள்ளி செயல்படுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
இதற்கு, ஆணையா் பதிலளித்துப் பேசுகையில், கட்டட அனுமதிக்கு சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்கப்படும். நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சுகாதாரப் பிரிவு மூலம் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கும் பள்ளியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, அப்துல் கலாமின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நகா்மன்ற உறுப்பினா்கள் மௌன அஞ்சலி செலுத்தினா். கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.