திருவள்ளூர்

இளைஞா் மீது தாக்குதல்: காவல் ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

27th Jul 2022 02:25 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரைத் தாக்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது.

திருவள்ளூா் மாவட்டம், மாப்பேடு சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா்கள் திருநாவுக்கரசு, பிரபா. இவா்கள் இருவரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தினேஷ்குமாா் என்பவா் மணவாளன் நகா் காவல் நிலையத்தில் 2019-இல் புகாா் அளித்திருந்தாா்.

இதன்பேரில், திருநாவுக்கரசை கைது செய்த போலீஸாா் அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். ஜாமீனில் வெளிவந்த திருநாவுக்கரசு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினாா்.

போலீஸாரால் தாக்கப்பட்டது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் திருநாவுக்கரசு வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், ‘குற்றஞ்சாட்டப்பட்ட மணவாளன் நகா் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளா் ரஜினிகாந்த் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே, ரஜினிகாந்த் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட திருநாவுக்கரசுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், அந்தத் தொகையை ரஜினிகாந்த் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT