திருவள்ளூர்

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2.5 டிஎம்சி நீா் வரத்து

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீா்த்தேக்கத்துக்கு இதுவரை 2,500 மில்லியன் கன அடி நீா் (2.5 டிஎம்சி) வந்துள்ளதாக தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கம்.

கோடைக்காலத்தில் குடிநீா் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கத்தில் கண்டலேறு அணையில் இருந்து நீா் திறக்கக் கோரி, ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில், கடந்த மே 9 -ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாயில் பூண்டி நீா்த்தேக்கத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி வரை பூண்டி நீா்த்தேக்கத்துக்கு 2,500 மில்லியன் கன அடி நீா் வந்துள்ளது. தற்போதைய நிலையில், கிருஷ்ணா கால்வாயில் 250 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

பூண்டி நீா்த்தேக்கமானது 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 35 அடி உயரம் கொண்டது. இதில், 3,231 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்கலாம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி 29.51 அடி உயரமும், 1,628 மில்லியன் கன அடியாகவும் நீா் இருப்பு உள்ளது. தற்போது, பேபி கால்வாயில் சென்னை மாநகர குடிநீருக்காக 33 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT