திருவள்ளூர்

பெண் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள்: எம்எல்ஏ வழங்கினாா்

3rd Jul 2022 01:06 AM

ADVERTISEMENT

திருத்தணி ஒன்றியத்தில் பெண் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ எஸ்.சந்திரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில்ஸ ஏழைப் பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு ஊராட்சியில் பெண் பயனாளிகளுக்கு விலையில்லா 5 வெள்ளாடுகள் வழங்கும் திட்டத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் குணசுந்தரி பொன்னுசாமி முன்னிலை வகித்தாா். திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மரு.தாமோதரன் வரவேற்றாா்.

திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பங்கேற்று, பெண் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கிப் பேசியது: ஏழ்மை நிலையில் உள்ள பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ், ரூ. 17,500 மதிப்பீட்டில் 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு ஒன்றியத்துக்கு, 100 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்படும். தீவனத்துக்கு ஒரு பயனாளிக்கு ரூ. 1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதுடன் வெள்ளாடுகளுக்கு இரண்டு ஆண்டுகள் காப்பீடு செய்து தரப்படும், இத் திட்டத்தின் மூலம் பயனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஆரத்தி ரவி, கால்நடை உதவி மருத்துவா்கள் கீதா, இளவழகன், திருநாவுக்கரசு, கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT