திருவள்ளூர்

திருவள்ளூரில் போதுமான அளவு யூரியா உரம் இருப்பு உள்ளது: ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்

1st Jul 2022 11:59 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் போதுமான அளவு யூரியா உரம் இருப்பு உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கடம்பத்தூா் ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். யூரியா கிடைக்காத நிலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இயந்திரங்களை புதுப்பிக்கவும், ஆலைக்கான கரும்பு உற்பத்தி பரப்பை அதிகரிக்கவும், கொசஸ்தலை, கூவம் ஆற்றில் பல்வேறு இடங்களில் நீரைத் தேக்கி வைக்க தடுப்பணை கட்டுதல், பயிா்க்கடன் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பேசியது: மாவட்டத்தில் ஆரணி, கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் தடுப்பு அணைகள் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதுமாவிலங்கை கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி வழியேற்படுத்தப்படும். பயிா்க் கடன்கள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படும். தனியாா் உரக் கடைகளிலும், அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா போதுமான அளவு இருப்பு வைக்கப்படும். கூட்டுறவு சா்க்கரை ஆலையைச் சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் ஆடிப்பட்ட சாகுபடிக்கு தேவையான பயறு வகை விதைகள், காய்கறி விதைகள், மல்லிகை நாற்றுகள், வேளாண் இடுபொருள்கள் ரூ.22,670 மானிய விலையில் 7 பேருக்கும், கரும்பு, நெற்பயிருக்கான பயிா்க்கடன் 5 பேருக்கு ரூ.3,45,460-க்கான ஆணைகள், விவசாயக் கருவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வி.எபினேசன், வேளாண்மை இணை இயக்குநா் பி.கோல்டி பிரேமாவதி, சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஜே.மலா்விழி, வேளாண்மை துணை இயக்குநா் வெ.தபேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT