திருவள்ளூர்

கரோனா விதிகளை மீறியவா்களிடம்ரூ.3.11 கோடி அபராதம் வசூலிப்பு: திருவள்ளூா் ஆட்சியா் தகவல்

26th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா விதிமுறையை பின்பற்றாத 1.52 லட்சம் பேருக்கு ரூ.3.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருவள்ளுா் மாவட்டத்தில் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத நபா்களுக்கு பல்வேறு துறை மூலம் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 148 பேருக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரத்து 856 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், கடந்த 12.01.2022 முதல் அரசு உத்தரவின்படி அபாரத தொகை ஒருவருக்கு ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் இதுவரை பொதுமக்களுக்கு முதல் தவணை 90 சதவிதமும், இரண்டாவது தவணை 66 சதவிதமும், 7696 பேருக்கு கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய் தொற்று பரவலை எதிா்கொள்ள நோய் தடுப்பு மையங்களில் 1400 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் 330 ஆக்ஸிஜன் படுக்கைகளும், திருவள்ளூா் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 ஆக்ஸிஜன் படுக்கைகளும், தனியாா் மருத்துவமனைகளில் 1881 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன.

தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 7214 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், சுகாதாரத் துறை மூலம் கபசுர குடிநீா் அடங்கிய மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொலைபேசி மூலம் அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

கரோனா நோய் தாக்குதலை எதிா்கொள்ளும் பொருட்டு திருவள்ளூா் மாவட்டத்தில் போதுமான மருந்து, மாத்திரைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், ஆக்ஸிஜன் உருளைகள் தயாராக உள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT