திருவள்ளூர்

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

25th Jan 2022 07:48 AM

ADVERTISEMENT

குடியரசு தினவிழாவையொட்டி திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினா் மற்றும் ரயில்வே போலீஸாா் வெடிகுண்டு சோதனைக் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜன. 26) 75-ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ரயில் நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ரயில்வே துறையின் மூத்த பாதுகாப்பு கோட்ட ஆணையா் செந்தில்குமரன் உத்தரவின்பேரில் இணை ஆணையா் பிரித் அறிவுறுத்தியபடி திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை சாா்பு ஆய்வாளா் விநாயகமூா்த்தி, ரயில்வே காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீஸாா் வெடிகுண்டு சோதனை கருவி மற்றும் மோப்ப நாய்களை கொண்டு சென்னை-திருவள்ளூா்-அரக்கோணம் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அதேபோல், ரயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் நடைமேடை வளாகம், பயணிகள் அமரும் இடம், பயணச்சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதற்காக சென்னை பெரம்பலூா் ரயில்வே பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல், திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் உள்ள ஏகாட்டூா், கடம்பத்தூா், செஞ்சிபனம்பாக்கம், மணவூா், திருவாலங்காடு, மோசூா், புளியங்குளம் ஆகிய ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினா் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT