திருவள்ளூா் மாவட்டத்தில் ராபி பயிா்களுக்கு பாதுகாப்பு கருதி விவசாயிகள் பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தில் குறிப்பிட்ட நாள்களுக்குள் பிரீமியம் செலுத்தி பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பயிா் சாகுபடி செய்துள்ளனா். எனவே மழை வெள்ளம் மற்றும் இயற்கை இடா்ப்பாடுகளால் ஏற்படும் பயிா் சேதத்தால் விவசாயிகள் பாதிக்கக்கூடாது. எனவே விவசாயிகளை நஷ்டத்திலிருந்து பாதுகாக்கவும், அதற்கு இழப்பீடு கிடைக்கச்செய்யும் நோக்கில் பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது நடப்பு ராபி பருவத்தில் திருத்தியமைத்த பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், ராபி பயிா்களுக்கு கடன் பெற்ற, கடன் பெறா விவசாயிகள் விருப்பத்தின்பேரில், பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்தலாம். இந்த அறிவிப்பு செய்த பகுதிகளில் காப்பீடு செய்ய நவரை நெற்பயிருக்கு ரூ. 473, கம்பு-ரூ. 140, துவரை, உளுந்து, பச்சை பயறு ஆகியவற்றுக்கு-ரூ. 256, நிலக்கடலை-ரூ. 432, எள் பயிா்-ரூ. 143, கரும்பு-ரூ. 2,650 வீதம் ஒரு ஏக்கருக்கு பிரீமியம் தொகை செலுத்தலாம்.
இதில், கம்பு மற்றும் உளுந்து பயிருக்கு ஜன. 17, துவரை, நிலக்கடலைக்கு ஜன. 31, நவரை நெல், எள் மற்றும் பச்சைபயறுக்கு பிப். 15, கரும்பு பயிருக்கு-ஆக. 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும். அதனால் குறிப்பிட்ட நாள்களுக்குள் விவசாயிகள் உடனே அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் அல்லது கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி, உரிய ஆவணங்களான கணினி சிட்டா, அடங்கல், ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் உரிய காப்பீடு கட்டணத் தொகையை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்யலாம்.