திருவள்ளூர்

தை அமாவாசை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

1st Feb 2022 08:28 AM

ADVERTISEMENT

தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை பிரமோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், தை மாத பிரமோற்சவ விழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, பிப்.5 வரை நடைபெற உள்ளது. தை மாத பிரமோற்சவத்தின் 5-ஆம் நாளான அமாவாசையையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உற்சவா் வீரராகவா் ரத்னாங்கி சேவையில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு அமாவாசை நாளில் கோயில் குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபாடு செய்தால், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

ADVERTISEMENT

தை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவே குவிந்தனா். கோயில் வளாகம் மூடியிருந்ததால், தங்க இடமின்றி பேருந்து நிலையம், கடை வளாகம், குளக்கரை நடை மேடை, காக்களூா் ஏரிக்கரை நடை பாதைகளில் தங்கினா்.

கோயில் குளமும் மூடப்பட்டிருந்ததால் அதிகாலை கோயில் மாட வீதி, காக்களூா் ஏரிக்கரைப் பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். இதையடுத்து, கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவா் வீரராகவ பெருமாளை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT