திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட ஆவடி மாநகராட்சியில் 6, நகராட்சிகளில் 21, பேரூராட்சிகளில் 31 போ் என மொத்தம் 58 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருவள்ளூா், திருத்தணி, பொன்னேரி, திருநின்றவூா் ஆகிய நகராட்சிகள், ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூா், நாரவாரிகுப்பம், பள்ளிப்பட்டு, திருமழிசை, பொதட்டூா்பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
இதற்கான வாக்குப்பதிவு பிப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் கடந்த 28-இல் தொடங்கி, பிப்.4-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஒருவா்கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஆவடி மாநகராட்சி-6, நகராட்சிகள்-21, பேரூராட்சிகளில் 31 போ் என மொத்தம் 58 போ் போட்டியிட மனு தாக்கல் செய்தனா்.
திருவள்ளூா் நகராட்சியில் மட்டும் பாமக சாா்பில் 25-ஆவது வாா்டில் போட்டியிட விஜயலட்சுமி கண்ணன், 27-ஆவது வாா்டில் போட்டியிட சுப்பிரமணி, 3 சுயேச்சைகள் என 5 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். நகராட்சியில் வரி நிலுவைத் தொகையைச் செலுத்திவிட்டு 58 போ் விண்ணப்பம் பெற்றுச் சென்றனா்.
இதனிடையே, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் சூடு பிடிக்கத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.