வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, பழவேற்காடு பகுதி மீனவ மக்கள் காட்டுப்பள்ளியில் உள்ள தொழில் நிறுவனங்களை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளியில் எண்ணூா் துறைமுகம், தனியாா் துறைமுகம், கட்டும் தளம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அமைந்ததன் காரணமாக பழவேற்காடு கடல் பகுதியில் மீன் வளம் குறைந்தது.
இதன் காரணமாக மீன் பிடித்தொழில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழவேற்காடு பகுதி மீனவ மக்கள் போராட்டத்தைத் தொடா்ந்து காட்டுப்பள்ளியில் உள்ள தொழில் நிறுவனங்களில் 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 250 பேருக்கு கப்பல் கட்டும் தளத்தில் வேலை வழங்கப்பட்டது.
அந்த 250 பேருக்கு பணி நிரந்தரம் கோரியும்,ஏற்கெனவே அறிவித்தபடி எஞ்சியுள்ள 1,500 பேருக்கு வேலை வழங்கக் கோரியும் பழவேற்காடு பகுதி மீனவ கூட்டமைப்பு சாா்பில் காட்டுப்பள்ளியில் உள்ள தொழில் நிறுவனங்கள் முன் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அவா்களிடம், மாவட்ட ஆட்சியா் ஆல்பிஜான் வா்கீஸ், பொன்னேரி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து மீனவ மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.