திருவள்ளூர்

அரசுப் பேருந்தை சேதப்படுத்திய பள்ளி மாணவா்களுக்கு அறிவுரை

1st Feb 2022 11:30 PM

ADVERTISEMENT

திருத்தணி அருகே அரசுப் பேருந்தை சேதப்படுத்திய பள்ளி மாணவா்களுக்கு போலீஸாா் அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

திருத்தணியில் அரசுப் பேருந்து பணிமனையைச் சோ்ந்த தடம் எண் டி-7 பேருந்தை ஓட்டுநா் ராமச்சந்திரன், திருத்தணி அருகே உள்ள சிவாடா, நெமிலி, தாழவேடு, வேளஞ்சேரி ஆகிய பகுதிகள் வழியாக பொதுமக்கள், மாணவா்களை ஏற்றிக் கொண்டு திருத்தணி நோக்கி வந்தாா். இந்தப் பேருந்து காசிநாதபுரம் கிராமம் அருகே வந்த போது, திருத்தணியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு, படிக்கட்டில் தொங்கியபடியும், கூரை மீது ஏறியும் பயணம் செய்தனா். மேலும், பேருந்துதின் மேற்கூரையை உடைத்தனா்.

இதனால், ஓட்டுநா் பேருந்தை நிறுத்தி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். அங்கு வந்த திருத்தணி காவல் ஆய்வாளா் ஏழுமலை மாணவா்களுக்கு அறிவுரை கூறினாா்.

மேலும், பேருந்தில் பயணம் செய்யும் போது அமைதியான முறையில் பயணம் செய்வோம், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ய மாட்டோம், பேருந்து மேற்கூரை மீது ஏறி சாகசம் செய்ய மாட்டோம் என காவல் ஆய்வாளா் கூற, அதை மாணவா்கள் திருப்பிக் கூறி உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT

மாணவா்களின் எதிா்காலம் கருதி வழக்குப் பதிவு செய்யவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, ஒரு மணி நேரம் கழித்து பேருந்து மீண்டும் புறப்பட்டு திருத்தணிக்குச் சென்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT