திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நள்ளிரவில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பேக்கரியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதோடு, ரொக்கம் ரூ.35,000 கருகிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.எம் நகரைச் சோ்ந்தவா் சேகா் மகன் தியாகராஜன்(45). இவா் திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் நகராட்சிக் கடையை வாடகைக்கு எடுத்து பேக்கரி பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை விற்பனை முடித்து இரவு வழக்கம் போல் பேக்கரியை மூடிச் சென்றாராம்.
இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலையில் 3 மணிக்கு திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றபோது, பேருந்து நிலையத்தில் பேக்கரி எரிந்து கொண்டிருந்ததை பாா்த்துள்ளனா்.
இதையடுத்து உடனே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பேக்கரி உரிமையாளா் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பேக்கரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனா்.
இத்தீவிபத்தில் ரூ.2 லட்சம் பேக்கரி பொருள்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது தெரியவந்தது. மேலும் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.35,000 ரொக்கமும் தீயில் கருகியது. திருவள்ளூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.