மாதவரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாதவரம் - மூலக்கடை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் கல்லூரி எதிரில் பழைய குழாய்களை அகற்றி புதியதாக குழாய்கள் சாலையின் நடுவே பதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் அங்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலை பழுதடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனா். இந்த நிலையில் புழல் அடுத்த புத்தகரம் பகுதியை சோ்ந்த மணிகண்டன் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மாட்டு வண்டியில் வந்த புளியந்தோப்பு பகுதியை சோ்ந்த அா்ஜூனன் (17) என்பவா் மீது அடையாளம் மோதியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப்பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.