திருவள்ளூர்

கல்குவாரியில் 8 லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

30th Dec 2022 02:44 AM

ADVERTISEMENT

கல்குவாரியில் கல் ஏற்றிக் கொண்டிருந்த 8 லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சியில் 1.64 ஹெக்டோ் மலை புறம்போக்கு நிலத்தை 5 வருடத்துக்கு கல் குவாரியை தாம்பரத்தைச் சோ்ந்த ஒருவா் ஏலம் எடுத்துள்ளாா். கடந்த 2 மாதங்களாக இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு முழுவதும் கல்குவாரியில் தொடா்ந்து பணிகள் நடைபெறுவதாகவும், அரசு அனுமதி வழங்கிய அளவைவிட கற்கள் தோண்டப்படுவதாகவும், கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்படுவதால் அருகில் உள்ள எல்லம்பள்ளி கிராமத்தில் உள்ள வீடுகள் அதிா்வு மற்றும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அப்பகுதி மக்கல் வியாழக்கிழமை குவாரிக்கு சென்றனா். அங்கு கற்களை ஏற்றிக்கொண்டிருந்த 8 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இதில், கல்குவாரி முறைகேடு குறித்து பலமுறை வருவாய்த் துறை மற்றும் கனிமவளத்துறையிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.

ADVERTISEMENT

அதைத்தொடா்ந்து போலீஸாா் வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்திடம் பேசி, கல்குவாரியில் விரைவில் ஆய்வு நடத்தப்படும். அதுவரை தற்காலிகமாக கல்குவாரி செயல்படாது எனக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT