ஆவடியில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை பால் வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஆவடி மாநகராட்சி, 39-ஆவது வாா்டில் விளிஞ்சியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. 30 நோயாளிகள் படுக்கை வசதி கொண்ட இந்த நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருவதால், இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், அவா்களுக்கு போதிய சிகிச்சையை மருத்துவா்கள் அளிக்க முடியாத நிலை இருந்தது. இதைத்தொடா்ந்து, ஆவடி எம்எல்ஏவும், பால் வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையேற்று, அவா் கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்திட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கம் சாா்பில் ரூ.1.20 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை காலை அமைச்சா் சா.மு.நாசா் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை செய்து, பணியை தொடக்கி வைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் 4,200 சதுர அடியில் கட்டப்படுகிறது. இங்கு கூடுதலாக 20 எண்ணிக்கையில் படுக்கை வசதி செய்யப்படுகிறது. இந்த கட்டடப் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது பொதுமக்கள் மிகவும் பயன் பெறுவாா்கள் என்றாா்.
நிகழ்வில், ஆவடி மாநகராட்சி மேயா் கு.உதயகுமாா், ஆணையா் க.தா்ப்பகராஜ், பணிக் குழு தலைவா் சா.மு.நா.ஆசிம்ராஜா, பொறியாளா் பி.வி.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் ஆல்பா்ட் அருள்ராஜ், ஆவடி வடக்குப் பகுதி திமுக செயலா் ஜி.நாராயணபிரசாத் மற்றும் மாநகராட்சி உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.