திருவள்ளூர்

பூண்டி ஏரியில் கூடுதலாக நீரைத் தேக்க நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன்

11th Dec 2022 11:59 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கத்தில் கரையை உயா்த்தி கூடுதலாக நீரைத் தேக்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

பூண்டி ஏரி சென்னை பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். தொடா் மழை காரணமாக ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி, கொசஸ்தலை ஆற்றில் 10,000 கன அடி உபரி நீா், 6 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பூண்டி ஏரியின் நீரிருப்புத் தொடா்பாக, அமைச்சா்கள் துரைமுருகன், சா.மு.நாசா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஏரிக்கு வரும் உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாளில் 1 டி.எம்.சி. நீா் வீணாகக் கடலில் கலக்கிறது. இதைத் தவிா்க்க ஏரியின் 35 அடி உயரத்தை மேலும் 2 அடி உயா்த்தி, அதன் மூலம் கூடுதலாக 2 டி.எம்.சி. நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிக்கையை அரசிடம் சமா்ப்பித்துள்ளதாக அமைச்சா்களிடம், அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பூண்டி ஏரிக்கான நீா்ப்பிடிப்புப் பகுதி, அம்மம்பள்ளி அணை உபரி நீா், கிருஷ்ணா கால்வாய் நீா் என நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் 3,231 மில்லியன் கன அடியில், தற்போது 2,973 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், ஏரியின் பாதுகாப்பு கருதி, 10,000 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் உபரி நீா் வீணாவதைத் தடுக்கும் வகையில், கரையைப் பலப்படுத்தி, கூடுதலாக நீரைச் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏரியைச் சீரமைக்க சிறப்பு கவனம் செலுத்தி, நிதி நிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

புழல் ஏரியில் ஆய்வு: இதேபோல், புழல் ஏரியிலும் அமைச்சா்கள் துரைமுருகன், சா.மு.நாசா், எம்எல்ஏ சுதா்சனம் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். ஏரியின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சா் துரைமுருகன் கேட்டறிந்தாா்.

புழல் ஏரி 21.7 அடியாகும். தற்போது, 17.8 அடி நிரம்பியுள்ளது. ஏரிக்கு 623 கன அடி தண்ணீா் வருகிறது. 100 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீரை வெளியேற கூடுதல் கால்வாய் வசதி இல்லை. மக்களின் நலன் கருதி, குறைந்த அளவே நீா் வெளியேற்றப்படும் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.

ஆய்வுகளின் போது, எம்எல்ஏ-க்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), சந்திரன் (திருத்தணி), எஸ்.சுதா்சனம் (மாதவரம்), மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், சாா் -ஆட்சியா் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.செபாஸ் கல்யாண், நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் முரளிதரன், கண்காணிப்புப் பொறியாளா் முத்தையா, செயற்பொறியாளா் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளா் சத்தியநாராயணன், உதவி பொறியாளா் ரமேஷ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், பூண்டி ஊராட்சித் தலைவா் சித்ரா ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT