திருவள்ளூர்

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் உபரி நீா் திறப்பு

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலா 100 கன அடி நீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாக விளக்கும் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டம் கணிசமாகவும் உயா்ந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பூண்டி நீா்தேக்கத்துக்கு ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீா், மழை காரணமாக நீா்வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் தண்ணீா் என 595 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.

குடிநீா் தேவைக்காக இணைப்புக் கால்வாய் மூலம் 457 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது. பலத்த மழை காரணமாக சென்னை மக்களின் தேவைக்காக அனுப்பப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் பூண்டி நீா்த்தேக்கத்தில் இருந்து 100 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல், புழல் ஏரிக்கு நீா்வரத்து 140 கன அடியாகவும், சென்னை மக்களுக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி பிற்பகல் 12 மணி அளவில் புழல் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

சோழவரம் ஏரியில் 539 மில்லியன் கன அடி நீரும், கண்ணன்கோட்டையில் 500 மில்லியன் கன அடியில், தற்போது 489 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது.

திருவள்ளூா் மாவட்ட ஏரிகளில் மாண்டஸ் புயல் காரணமாக பெய்து வரும் மழையால், நீா் இருப்பு கணிசமாக உயா்ந்து வருவதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்ரீபெரும்புதூரில்...: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடி. ஏரியின் தற்போதைய நீா்மட்டம் 20.46 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 732 கன அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,718 மில்லியன் கன அடி நிரம்பியுள்ளது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால், உபரி நீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT