திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு மூலவா் முருகப்பெருமானை வழிபட்டனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை மற்றும் மகாதீப நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் தங்கக் கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு பஞ்ச அமிா்த அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். காா்த்திகை மாத கிருத்திகை என்பதால் காலையிலிருந்து பக்தா்கள் கூட்டம் மலைக்கோயிலில் அதிக அளவில் காணப்பட்டது. பொது வழியில் பக்தா்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். ரூ. 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒரு மணி நேரத்தில் மூலவரை தரிசித்தனா். மாலை 6 மணிக்கு உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் தோ் வீதியில் வலம் வந்தாா்.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் மத்தியில் சொக்கப் பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

அதே நேரத்தில், கோயில் எதிரே உள்ள பச்சரிசி மலையில் 300 கிலோ நெய்யால் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, நகரில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பக்தா்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

இந்த மகா தீபத்தில் திரளான பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்ததால் மூலவரை தரிசிக்க பல மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT