உலக மண் தினத்தையொட்டி, வேளாண் நலத் துறை சாா்பில், மண் வளம் குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புன்னப்பாக்கம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட வேளாண், உழவா் நலத் துறை இணை இயக்குநா் சுரேஷ் பேசியது:
மண் வளம் குறித்தும், சாகுபடிக்கு மண் வளம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம். கிராமம் தோறும் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை வழங்கப்படுகிறது.
இதில், பயிா் சுழற்சி முறை, உயிா் உரங்கள், பசுந்தாள் உர பயிா் சாகுபடி முக்கியத்துவம் அறிந்து பரிந்துரைத்த உரங்களை இட வேண்டும். இதன் மூலம் உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைவதுடன், மகசூல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றாா்.
தொடா்ந்து, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளையும் அவா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த மண் பரிசோதனை ஆய்வகத்தின் செயல்முறைகள், செம்மண், அமில மண், மணல், மணல்கள் கலந்த குறுமண், உவா் மண், சுண்ணாம்பு மண் உள்ளிட்ட மண் வகைகளை விவசாயிகள் பாா்வையிட்டனா். மண் சேகரித்தல், அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. விவசாய நிலத்தில் மண் மாதிரி எடுக்கும் முறை, செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டப்பட்டது.
நிகழ்வில் வேளாண்மை மற்றும் வணிகத் துறை இணை இயக்குநா் ராஜேஸ்வரி, விதைச் சான்று துறை உதவி இயக்குநா் ஜீவராணி, வேளாண் துணை இயக்குநா் (மாநில திட்டம்) அனிதா, வேளாண் உதவி இயக்குநா் (விதைச் சான்று) கவிதா, திருவூா் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா் அருள்பிரசாத், கால்நடை உதவி இயக்குநா் பாஸ்கா், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சங்கரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.