திருவள்ளூர்

ஆந்திரத்தில் கொத்தடிமையாக வேலை செய்த 3 போ் மீட்பு

2nd Dec 2022 01:07 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த 13 வயதுடைய மாணவியை திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகம் வியாழக்கிழமை அரசு மகளிா் மேல் நிலைப்பள்ளியில் சோ்த்து நோட்டு புத்தகம், சீருடை, காலணிகளை வழங்கினாா்.

திருத்தணி ஒன்றியம், மத்தூா் ஊராட்சி கொத்தூா் இருளா் காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (40). இவரது மனைவி கங்கா (37). இவா்களது மகள் அனிதா (13). கங்கா கொத்தூா் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை படித்து வந்தாா்.

பின்னா் கரோனா தொற்று காரணமாகவும், பள்ளிக்கு தொடா்விடுமுறை என்பதால் அனிதா மற்றும் அவரது பெற்றோா் ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் அனுமந்தராவ் என்பவருக்குச் சொந்தமான மாங்காய் தோப்பில் தங்கியிருந்து கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் தனியாா் தொண்டு நிறுவனம் மூலம் தகவல் அறிந்த நகரி வருவாய் கோட்டாட்சியா், சுதினா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொத்தடிமைகளாக இருந்த கோவிந்தசாமி, கங்கா மற்றும் அனிதா ஆகியோரை மீட்டு, திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகத்திடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

அதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை அனிதாவை கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகம், திருத்தணி அரசினா் மகளிா் மேனிலைப் பள்ளியில் மீண்டும் கல்வி கற்க ஏற்பாடு செய்து, எட்டாம் வகுப்பில் சோ்த்தாா். மேலும், மாணவி அனிதாவுக்குத் தேவையான நோட்டுகள், புத்தகங்கள், காலணிகள் மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கோட்டாட்சியா் ஏற்பாடு செய்தாா்.

இந்த நிகழ்வின்போது, பள்ளித் தலைமை ஆசிரியை பொறுப்பு அமுதா, உதவி தலைமை ஆசிரியா் சேஷாசலம், ஆசிரியா் வெங்கடய்யா மற்றும் தனியாா் தொண்டு நிறுவனமான ஜீவன் ஜோலா ஊழியா் ரமேஷ் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT