திருவள்ளூா் மாவட்டத்தில் போதுமான உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. தமிழகத்தில் யூரியா, டி.ஏ.பி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களில் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா-1066 மெ.டன், டி.ஏ.பி-853 மெ.டன், காம்ப்ளக்ஸ்-4869, எஸ்.எஸ்.பி-457 மெ.டன், எம்.ஓ.பி-227 மெ.டன் என உரங்கள் இருப்பில் உள்ளது. அதனால், உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை உரிய ரசீதுடன் விவசாயிகளின் ஆதாா் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனையக் கருவி மூலம் விற்க வேண்டும். உரமூட்டைகளின் விலையை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யவே கூடாது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது உரிய ஆவணமின்றி விற்பனையில் ஈடுபட்டாலோ உரக்கட்டுப்பாட்டு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.