திருவள்ளூர்

திருவள்ளூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

19th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் புதன்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் பல மணி நேரமாக ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பூந்தமல்லி, ஆவடி, ஜமீன் கொரட்டூா், ஈக்காடு, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, பூண்டி, கடம்பத்தூா், திருப்பாச்சூா், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் பலத்த சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழையால் பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து மின்வயரில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

இதேபோல், திருவள்ளூா் நகராட்சி ஆயில் மில், ஜெயா நகா், ஜெயின் நகா், எம்.ஜி.எம். நகா் மற்றும் அதையொட்டிய பகுதிகளான காக்களூா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அத்துடன், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் முறிந்து சாய்ந்தன. இரவு நேரம் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இதில், ஆயில் மில் உள்ளிட்ட சாலைகள் மீது சாய்ந்த மரங்களை நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டன.

மழையால் கிளைகள் முறிந்து மின்வயரில் விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால், இரவு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா்.

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலை முதல் மின் பணியாளா்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, பிற்பகல் 12.30 மணிக்கு மின்விநியோகம் செய்யப்பட்டது.

திருவள்ளூா் பகுதியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீட்டரில்)

திருவள்ளூா்-63, பூந்தமல்லி-42, ஜமீன் கொரட்டூா்-33, பள்ளிப்பட்டு-30, பூண்டி-22, ஆவடி-18, திருவாலங்காடு-15, திருத்தணி-11, தாமரைப்பாக்கம்-5, பொன்னேரி-2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT