திருவள்ளூர்

ஆவடியில் 1,932 மாணவர்களுக்கு மிதிவண்டிகள்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

18th Aug 2022 03:13 AM

ADVERTISEMENT

ஆவடி தொகுதிக்குள்பட்ட 7 பள்ளிகளைச் சேர்ந்த 1,932 மாணவ- மாணவிகளுக்கு ரூ.97.30 லட்சத்தில் இலவச மிதிவண்டிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை வழங்கினார்.
இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா ஆவடி, காமராஜர் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி, இமாகுலட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது:
திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் 10,832 மாணவர்களுக்கு தலா ரூ.5,175 வீதம் ரூ.5,60 கோடியிலும், 13,080 மாணவிகளுக்கு தலா ரூ.4,992 வீதம் ரூ.6.52 கோடியிலும் என மொத்தம் 23,912 மாணவ-மாணவிகளுக்கு ரூ.12 கோடியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் ஆவடி மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆவடி காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சேர்ந்த 563 மாணவிகளுக்கும், காமராஜ் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 113 மாணவர்களுக்கும், திருநின்றவூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 199 மாணவ-மாணவிகளுக்கும், பட்டாபிராம், தண்டுரை அரசு பள்ளியைச் சேர்ந்த 124 மாணவ-மாணவிகளுக்கும், திருவேற்காடு சுந்தர சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 45 மாணவ-மாணவிகளுக்கும், ஆவடி ஆர்.சி.எம் மேல்நிலைப் பள்ளி சேர்ந்த 201 மாணவ-மாணவிகளுக்கும், இமாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 687 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,932 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார் ஆணையர் க.தர்ப்பகராஜ், சார் -ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், ஆவடி கல்வி மாவட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT