திருவள்ளூர்

காட்டூர் துணை மின் நிலையம் ரூ. 4.5 கோடியில் திறன் உயர்வு

17th Aug 2022 03:13 AM

ADVERTISEMENT

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காட்டூர் துணை மின் நிலையம் ரூ. 4.5 கோடியில் திறன் உயர்த்தப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை பகுதியில் காட்டூர் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த மையம் 10 மெகா வாட் திறன் கொண்டது.
இதை திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, வெள்ளானூர், வீராபுரம், ஆட்டந்தாங்கல், செங்குன்றம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் புதிதாக தனியார் நிறுவனங்களும், குடியிருப்புகளும் நாளுக்கு நாள் உருவாகி வந்தது.
இதையடுத்து, மேற்கண்ட பகுதியில் விநியோகம் செய்யப்படும் மின்சாரம் குறைந்த அழுத்தம் கொண்டதாக இருந்தது. இதனால், காட்டூர் துணை மின் நிலையத்தைத் திறன் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, துணை மின் நிலையம் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் 10 மெகா வாட்டில் இருந்து 16 மெகா வாட்டாக அண்மையில் திறன் உயர்த்தப்பட்டது. இதை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
அப்போது, காட்டூர் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம், ஆவடி கோட்ட செயற்பொறியாளர் அருணாசலம், உதவி கோட்ட செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி பொறியாளர் (பராமரிப்பு) ஹேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT