திருவள்ளூர்

பா.ஜ.க.வினர் வன்முறை கலாசாரத்தில் ஈடுபடமாட்டார்கள்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

14th Aug 2022 12:59 PM

ADVERTISEMENT

பா.ஜகவினர் வன்முறையில் எப்போதுமே ஈடுபடமாட்டார்கள் என தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

75-ஆவது சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றுவோம் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க விவசாய அணி சார்பில் டிராக்டர் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூர் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா தலைமை வகித்தார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்ததோடு தானும் டிராக்டர் இயக்கி பங்கேற்றார். 

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இப்பேரணி அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் தொடங்கி, ஆட்சியர் அலுவலகம், எம்.ஜி.ஆர் சிலை வழியாக வந்து காமரஜார் சிலை முன்பு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. நாடு முழுவதும் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழா கோலாகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் 75-ஆவது சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையில் 75 டிராக்டர்களில் பேரணி நடத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலிருந்தும் பலர் சுதந்திரத்திற்காக போராடியும், மகாகவி பாரதி தனது பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையையும் ஏற்படுத்தினார். 

இதையும் படிக்க- பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்! 

ADVERTISEMENT

அதனால் இந்த நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தும் நோக்கத்தில் 13-முதல் ஆக.15 வரையில் வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையேற்று பொதுமக்கள் தாமாக முன்வந்து வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தது மிகவும் பெருமையாக உள்ளது. இது போன்று நாட்டு மக்களிடையே ஒற்றுமையை பார்க்கையில் 2047-க்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும். எப்போதுமே பா.ஜ.கவினர் வன்முறை கலாசராத்தை விரும்பாதவர்கள். அதனால் மதுரையில் நடந்த காலணி வீச்சு சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. 

இதற்கிடையே பா.ஜ.கவினர் ஈடுபட வாய்ப்பில்லை என்பதால், வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீஸார் தான் விசாரிப்பார்கள் என மட்டும் அவர் தெரிவித்தார். இந்த டிராக்டர் விழிப்புணர்வு பேரணியில் மாநில ஓபிசி அணி பிரிவு தலைவர் லோகநாதன், மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லயன் சீனிவாசன், மாவட்ட செயாலளர்கள் பன்னீர்செல்வம், பாலாஜி, தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ரகு,  பூண்டி பாண்டுரங்கன், நகர் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் சுபாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Tags : bjp LMurugan
ADVERTISEMENT
ADVERTISEMENT