திருவள்ளூர்

6.14 நிமிஷம் ஓம்கார ஆசனம் செய்து சிறுவன் உலக சாதனை

11th Aug 2022 05:00 AM

ADVERTISEMENT

பூந்தமல்லியில் 7 வயது சிறுவன் கடினமான ஓம்கார ஆசனத்தை 6.14 நிமிஷங்களுக்கு மேல் செய்து உலக சாதனை படைத்தார்.
 ஆவடி, பருத்திப்பட்டைச் சேர்ந்தவர் பாபுரவி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு தர்ஷித் (7) என்ற மகன் உள்ளார். இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 சிறு வயதிலிருந்தே தர்ஷித் யோகாசனங்களைக் கற்று வருகிறார். இதில், சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக சிறப்புப் பயிற்சிகளையும் எடுத்து வந்தார்.
 குறிப்பாக, யோகாசனத்தில் மிகவும் கடினமான ஆசனமான ஓம்கார ஆசனத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்து வந்தார்.
 இந்த நிலையில், திங்கள்கிழமை பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் தர்ஷித் ஓம்கார ஆசனத்தில் தலையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வைத்தவாறு 6.14 நிமிஷம் ஆசனம் செய்து உலக சாதனை படைத்தார்.
 தர்ஷித்தின் இந்த சாதனை "நோபல் வேர்ல்ட் ரிக்கார்ட்' புத்தகத்தில் இடம் பெற்றது.
 இந்த சாதனையைப் பதிவு செய்வதற்காக "நோபல் வேர்ல்ட் ரிக்கார்ட்' அமைப்பினர் நேரில் வந்து பார்த்தார். பின்னர், பதிவு செய்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.
 இதற்கு முன்பு ஓம்கார ஆசனத்தில் இதுபோல் 2.45 நிமிஷம் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை சிறுவன் தர்ஷித் முறியடித்ததுடன், 2 மடங்கு நேரம் அதிகமாக ஓம்கார சாதனை செய்து அசத்தினார்.
 தர்ஷித்தின் இந்த சாதனையை யோகா மாஸ்டர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT