திருவள்ளூர்

திருவள்ளூரிலிருந்து கடையம் வரை ‘செல்லம்மா பாரதி ரத யாத்திரை’ தொடக்கம்

17th Apr 2022 11:48 PM

ADVERTISEMENT

செல்லம்மா பாரதியின் நினைவைப் போற்றும் வகையில், திருவள்ளூா் சேவாலயா வளாகத்திலிருந்து அவா் பிறந்த ஊரான கடையத்துக்கு ‘செல்லம்மா பாரதி ரத யாத்திரையை’ பாரதியாரின் உறவினா் உமாபாரதி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கசுவா கிராமத்தில் சேவாலயா அறக்கட்டளை சாா்பில், மகாகவி பாரதியாா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சேவாலயாவின் உந்து சக்திகளில் ஒருவா் மகாகவி பாரதியாா். பாரதிக்கு புதுச்சேரி, சென்னை, எட்டையபுரம் என அவரது வாழ்க்கையுடன் தொடா்புடைய எல்லா இடங்களிலும் சிலைகள், நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அதேபோல், அவா் சில ஆண்டுகள் மாணவராக இருந்த வாரணசியிலும் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரின் மனைவி செல்லம்மா பிறந்த ஊரான தென்காசி மாவட்டம், கடையத்தில் பாரதியாா் 2 ஆண்டுகள் வாழ்ந்துள்ளாா். எனினும், அதற்கான தடயங்கள் எதுவும் அங்கு இல்லை.

பாரதி 1897-ஜூன் 27 அன்று கடையம் கிராமத்தில் செல்லம்மாவை மணந்தாா். பின்னா், 1919-இல் கடலூா் சிறையில் இருந்து பாரதி விடுதலையாகி, 2 ஆண்டுகள் கடையத்தில் வாழ்ந்தாா். அதனால், அங்கு அவரின் நினைவை நிலைக்கச் செய்யும் திட்டத்தை சேவாலயா தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இதன் முதல் கட்டமாக, 27 ஜூன் 2022 அன்று, கடையத்தில் அவரின் 125-ஆவது திருமண நாளையொட்டி, செல்லம்மா மற்றும் பாரதியின் உருவச் சிலையை சேவாலயா நிறுவவுள்ளது. செல்லம்மாவின் தோளில் கை வைத்த பாரதியின் 7 அடி உயர சிலை தயாராகி, கடையம் கொண்டு செல்ல வைக்கப்பட்டிருந்தது.

சேவாலயா வளாகத்திலிருந்து சென்னை வழியாக கடையம் நோக்கி பாரதி செல்லம்மாவின் ரத யாத்திரையை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேவாலயா முரளிதரன் தலைமை வகித்தாா். ஓவியா் ஜெ.ஜெயராஜ், மரச்சிற்பி அப்பா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதியின் உறவினரான உமா பாரதி பங்கேற்று, செல்லம்மா பாரதி ரத யாத்திரையை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது:

பாரதி மற்றும் பராசக்தியின் தெய்வீக அருளால்தான் இதுபோன்ற பெரிய திட்டத்தை உருவாக்கி தன்னம்பிக்கை, உறுதியோடு செயல்படுத்த முடியும். மேலும், தனது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் மத்தியில் இந்தத் திட்டத்துக்கு ஆதரவைத் திரட்டுவதாக தெரிவித்தாா். இந்த ரத யாத்திரை சேவாலயாவின் கசுவா மையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று ஜூன்-1 ஆம் தேதி கடையத்தைச் சென்றடைய உள்ளது என்றாா் அவா்.

இதையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, நடனம், பாரதி கவிதை ஓதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறப்பிடம் பெற்றவா்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT