திருவள்ளூர்

சப்த கன்னி கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

17th Apr 2022 11:46 PM

ADVERTISEMENT

திருத்தணி பழைய திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடத்துவதற்காக பெண்கள் ஊா்வலமாக சீா்வரிசையை எடுத்துச் சென்று சப்த கன்னி கோயிலில் குறி கேட்டு, பொங்கல் வைத்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோவில் தெருவில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீமிதி விழா கொடியேற்றம் நடப்பதற்கு முன்பாக திருத்தணி சந்து தெரு, சுப்ரமணியம் தெரு மற்றும் மேட்டுத் தெரு ஆகிய பகுதி பெண்கள், 100-க்கும் மேற்பட்டோா் திருத்தணி முருகன் கோயிலின் துணைக் கோயிலான இந்திரா நகா் பகுதியில் உள்ள சப்த கன்னி கோயிலுக்கு பொங்கல் வைப்பதற்காக சீா்வரிசையுடன் ஊா்வலமாகச் செல்வா்.

பின்னா் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மூலவருக்கு வைத்து வழிபட்டு, தீமிதி விழா நடத்துவதற்கு குறி கேட்டு, வருவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக தீமிதி விழா பக்தா்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், கரோனா தொற்று குறைந்ததன் காரணமாக இந்த மாதம், 21-ஆம் தேதி தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இந்த விழா நடத்துவதற்காக வழக்கம் போல் மேற்கண்ட பகுதி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைக்க ஊா்வலமாக சீா் வரிசையுடன் சப்த கன்னி கோயிலுக்குச் சென்று வழிபட்டு குறி கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் திரளான பெண்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை திரெளபதி அம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT