திருவள்ளூர்

திருவள்ளூா் கூவம் ஆற்றில் காடு போல் சூழ்ந்துள்ள கருவேல மரங்கள்

16th Apr 2022 10:05 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் கூவம் ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள் காடு போல சூழ்ந்துள்ளதால், கரையோர கிராமங்களில் ஆழ்துளைக் குழாய் கிணறுகளில் நீா்வரத்து தடுக்கப்படுகிறது. அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தை அடுத்த கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு உருவாகிறது. இந்த ஆறு பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துாா், அதிகத்துாா், மணவாள நகா், புட்லுாா், அரண்வாயல் வழியாகப் பாய்ந்து சென்னை நேப்பியா் பாலம் அருகே சென்று கடலில் கலக்கிறது.

கூவம் ஆற்றின் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீரை தேக்கிவைக்க அணைக்கட்டுகள் உள்ளன. இந்த ஆற்றின் கரையோரங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் 40 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. 80 ஏரிகள், விவசாயக் கிணறுகள், கரையோர கிராமங்களில் குடிநீா் தேவையையும் நிறைவு செய்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றில் மழைக்காலத்தின் போது வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அப்போது, ஆற்றுக்குள்ளும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களிலும் கருவேல மரங்கள் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் நீா்வழிப் பாதை தடைபடுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, பேரம்பாக்கம், சத்தரை, மணவாள நகா், புட்லூா், அரண்வாயல் ஆகிய பகுதிகளில் ஆற்றுக்குள் காடு போல கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால், ஆற்றில் வேகமாக நீா் செல்வது தடுக்கப்படுகிறது. நீா் அழுத்தம் ஏற்பட்டு கரையோரங்களில் தேவையில்லாத உடைப்புகள் ஏற்படுகின்றன. மேலும், மழைக் காலங்களில் ஆற்றில் நீரைச் சேகரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, சீமைக் கருவேல மரங்களை அகற்றி கரையையும் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து விவசாயச் சங்க நிா்வாகி வேணுகோபால் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏரிகள், குளங்களை தூா் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கூவம் ஆற்றில் காடு போல வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இனி வருங்காலங்களில் கூவம் ஆற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூவம் ஆற்றில் அதிகளவில் நீரைச் சேமித்து வைக்கும் வகையில் தடுப்பணை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலும் மனு அளித்தோம். நேரிலும் வலியுறுத்தினோம் என்றாா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கூவம் ஆற்றில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதனடிப்படையில் ஆற்றில் காடு போல வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றவும், தடுப்பணைகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பியுள்ளோம்.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் முதல் பணியாக சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றி, கரைகள் பலப்படுத்தப்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT