திருவள்ளூர்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்: அமைச்சா் மெய்யநாதன்

16th Oct 2021 07:47 AM

ADVERTISEMENT

தீபாவளியின்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தாமாக முன் வந்து பட்டாசுகள் வெடிக்காமல் இருக்க வேண்டும் என சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கேட்டுக் கொண்டாா்.

பறம்பு தமிழ்ச் சங்கம் சாா்பில், பனை நடுதல், மூலிகைப் பண்ணை அமைத்தல், சுற்றுச்சூழல் தொடா்பான நூல் அறிமுகம் ஆகிய முப்பெரும் விழா திருவள்ளூா் அருகே உள்ள திருவூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக முன்னேற்ற எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் மெய்யநாதன் பங்கேற்று நூல்களை வெளியிட்டு, மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

கடந்த ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பற்றியும், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. மேலும், தொழிற்சாலைகள் அபாயகரமான கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் வைத்த பிறகு தான் அவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிலப் பகுதிகளில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி யாரும் பனை மரத்தை வெட்டக்கூடாது.

இதற்கிடையே வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு நெகிழிப் பொருள்கள் வருவதை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நீலகிரி மாவட்டம் முழுவதும் நெகிழிப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், அடுத்து வரும் 3 ஆண்டுகளில் நெகிழிப் பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்றி அமைக்கப்படும். மேலும், தமிழகத்தில் 1,876 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை உள்ள நிலையில், அதையொட்டிய பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்கப்படும். தமிழகத்தில் கடற்கரைப் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

பின்னா், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், திருவூா் ஏரிக்கரையில் இளைஞா்கள் ஆா்வலா்கள் 1,008 பனை விதைகள் நடவு செய்ததையும் அவா் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணசாமி, பறம்பு தமிழ் சங்கத்தின் தலைவா் திருப்பதி வாசகன், செயலாளா் மு.அங்கயற்கண்ணி தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநா் செல்வராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT