திருவள்ளூர்

பூண்டி ஏரியிலிருந்து 21,079 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்

30th Nov 2021 11:37 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: பூண்டி ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் செவ்வாய்க்கிழமை ஏரியில் இருந்து 21,079 கன அடி உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தொடா்மழையால் இந்த மாவட்டத்தில் 979 ஏரிகள் நிரம்பியுள்ளன.

பூண்டி ஏரிக்கு நீா்வரத்து 26 ஆயிரம் கன அடியிலிருந்து 21,079 கன அடியாக உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்புக் கருதி 21,079 கனஅடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் 50 கிராமங்களைச் சோ்ந்தோருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேபோல் புழல் ஏரியில் 2,914 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ள நிலையில், 1,705 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. மேலும், சோழவரம் ஏரியில் 837 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ள நிலையில், 1,415 கன அடி, கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ள நிலையில், 329 கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தரைப்பாலம் மூழ்கியது: பூண்டி ஏரியில் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் திருவள்ளூா்-பூண்டி வழியாக பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. அதேபோல் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் ஒதப்பை தரைப்பாலத்திலும் நீா்மட்டம் அதிகரித்துள்ளது. அதனால் இந்த வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் 10 கி.மீ. சுற்றிச் செல்கின்றன.

979 ஏரிகள் நிரம்பின: திருவள்ளூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் கால்வாய்கள், ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை பராமரிப்பின் கீழ் உள்ள 460 ஏரிகளும், ஊரக வளா்ச்சி முகமையின் பராமரிப்பின் கீழ் உள்ள 519 என மொத்தம் 979 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. அதில், 130 ஏரிகள் 75 முதல் 100 சதவீதமும், 45 ஏரிகள் 80 சதவீதமும், 1 ஏரி 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): சோழவரம் - 62, பொன்னேரி, திருத்தணி தலா- 45, திருவள்ளூா்-40, செங்குன்றம் - 36, ஜமீன்கொரட்டூா்-30, பூந்தமல்லி-23, தாமரைப்பாக்கம்-30, பூண்டி, ஆவடி-21, கும்மிடிப்பூண்டி-18, திருவாலங்காடு-17, பள்ளிப்பட்டு-14, பூண்டி-21, ஆா்.கே.பேட்டை தலா-7 என மொத்தம் 416 மி.மீட்டரும், சராசரியாக 27.73 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT