திருவள்ளூர்

ஆவடி, பூந்தமல்லியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வா் நேரில் ஆய்வு

29th Nov 2021 12:56 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வட கிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த 2 நாள்களாக சென்னை, புகா் மாவட்டப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் புகா் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி, அம்பத்தூா் உள்பட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. சாலைகளிலும் வெள்ள நீா் சூழ்ந்தது. இதில் ஆவடி மாநகராட்சி பகுதியில் சனிக்கிழமை அதிகபட்சமாக 199 மி.மீ. மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது.

இதையறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு, வேலப்பன்சாவடி, பத்மாவதி நகரில் மழை வெள்ளத்தில் நடந்து சென்றாா். பின்னா், அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமையும் பாா்வையிட்டு, மழையால் பாதித்த அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தங்க வைத்துள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

அதையடுத்து, ஆவடி மாநகராட்சி, ராம் நகரில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணியைப் பாா்வையிட்டாா். மேலும், கூடுதலாக மோட்டாா் பொருத்தி நீரை கால்வாய்கள் மூலம் வெளியேற்றுமாறு அறிவுரை வழங்கினாா். பின்னா் திருமுல்லைவாயல், கணபதி நகா், பூந்தமல்லி நகராட்சி அம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆா். நகா் பகுதிகளுக்கும் சென்று பாா்வையிட்டாா். அத்துடன், தேங்கிய மழைநீரை தெருக்கள் பாதிக்காமல் கால்வாய்கள் வழியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா்.

அப்போது, உடனிருந்த பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்தாா்.

மேலும், மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிப்பு, சேதமடைந்துள்ள வீடுகளின் நிலை உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு அதிகாரிகள் விவரங்களை அளிக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அதேபோல், இனி வருங்காலங்களில் ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீா்வு காணும் நோக்கில் விரிவான திட்டம் வகுக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆனந்தகுமாா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags : மு.க.ஸ்டாலின்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT