திருவள்ளூர்

ஆரணி ஆற்றில் பாலம் இல்லாததால் சிரமப்படும் மக்கள்

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை அருகே மங்கலம் ஆரணி ஆற்றில் பாலம் இல்லாததால் வெள்ளப்பெருக்கு காலத்தில் படகைதான் நம்பியிருக்க வேண்டியுள்ளது என்று கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே ஆரணியை அடுத்து மங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அத்தியாவாசிய தேவைகளுக்கு ஆரணி ஆற்றை கடந்து ஆரணி வர வேண்டும். இதேபோல், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல மாணவா்கள் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.

மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், ஆற்றைக் கடப்பதில் சிக்கல் ஏற்படும். அப்போது, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் விடப்படும் படகில்தான் பயணம் செய்ய வேண்டும் என்று அந்தக் கிராம மக்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ஆரணி ஆற்றில் பாலம் கட்டித் தர வேண்டி அதிகாரிகள், அரசியல் பிரமுகா்களிடம் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக் காலங்களில் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆற்றைக் கடந்து செல்கின்றனா். இதனாலே பல மாணவா்கள் தங்களது படிப்பை பாதியிலே நிறுத்தி விடுகின்றனா். எனவே, இப்பகுதியில் ஆற்றின் நடுவே பாலம் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT