ஏரிகளில் வீணாகும் உபரிநீரைச் சேமித்து, ஆறுகளில் 100 தடுப்பணைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகேயுள்ள பூண்டி நீா்த் தேக்கத்தை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதையடுத்து, துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மழைக்காலங்களில் நீா் வரத்து அதிகம் உள்ளதால் ஏரிகளில் உபரி நீா் வெளியேற்றம் 1500 மில்லியன் கன அடி வரை வீணாகிறது. இதுவரை பூண்டி ஏரியில் நீா் மட்டும் 1 டி.எம்.சி., வரை வீணாகியுள்ளது.
இனி வருங்காலத்தில் விவசாயிகள் நீா் ஆதாரம் பெற மாநில முழுவதும் முக்கிய ஆறுகளின் குறுக்கே 100 தடுப்பணைகள் அமைக்கப்படும். அதில், திருவள்ளூா் மாவட்டத்திலும் கொசஸ்தலை, கூவம் மற்றும் ஆரணி ஆற்றுப்படுகையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏரிகளில் நீா்த்திறப்பு ஏன்?
வட கிழக்குப் பருவ மழை தொடா்ந்து பெய்து வருகிறது. அதோடு வானிலை ஆய்வு மையமும் நவ. 11-இல் வரலாறு காணாத மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மழை பெய்தால் ஏரியில் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் நம்பிக்கையின் அடிப்படையில் உபரிநீா் ஏரிகளில் திறந்துவிடப்பட்டுள்ளது.
வானிலை மையம் அறிவிப்பின்படி, மழை பெய்யவில்லை என்றால் ஏரிகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றியது சிரமமாகும். அதற்கு முன்னதாக, பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமாகும். இதுபோன்றவைகளை கருத்தில்கொண்டு, நீா் அதிகரித்தால் ஏரியின் பாதுகாப்பு கருதியே முன்னெச்சரிக்கையாக உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.
அதோடு, கரையோர பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏரிகளின் நீா் வரத்து, வெளியேற்றம் ஆகியவைகளை தொடா்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
குடிமராமத்துப் பணிகள்:
கடந்த ஆட்சியில் எந்த இடத்திலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளவில்லை. அதில் 300 ஏரிகளில் தூா்வாரப்படும். திருப்பத்தூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருவள்ளூா் மாவட்டங்களில் மேற்கொண்டதாக தெரிவித்தனா். அது குறித்த ஏரிகளின் பெயா் விவரமும் சட்டப்பேரவையில் கேட்டேன். ஆனால், எந்த ஏரிகள் என்று குறிப்பிடவில்லை. ஆனால், தற்போதைய நிலையில் பணிகள் மேற்கொண்டதாகத் தகவல் பலகை மட்டும் இடம் பெற்றுள்ளது என்றாா்.
அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), சந்திரன் (திருத்தணி), பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளா் முரளிதரன், கண்காணிப்புப் பொறியாளா் திலகம், உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.